சென்னை,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாதம் தோறும், மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அந்த வகையில், 134-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி இன்று பேசினார்.
செப்பேடுகள்
நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்கப்பட்டது பற்றி பேசிய மோடி, " சோழ பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரம் எண்ணி பெருமை கொள்கிறோம். விரைவில் நெதர்லாந்தில் இருந்து சோழர் கால செப்பேடுகள் கொண்டு வரப்பட உள்ளன. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. சோழர்களின் கடல் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு வலிமையானது என்பதை அறிந்து வியந்தேன்." என்றார்.
தேசிய பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
மனதின் குரல்
பாரத பிரதமர் மோடி வானொலி வழியாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுகிழமை அன்று நாட்டு மக்களுடன் உரையாற்றும் மனதின் குரல் (MannKiBaat).
இன்றைய நிகழ்ச்சியில் நெதர்லாந்து பயணத்தின் போது அங்குள்ள லெய்டன் பல்கலைக்கழத்திலிருந்து தமிழர் தொன்மையை மீட்கும் வகையில் சோழர் கால ஆனைமங்கலம் செப்பேடுகளை மீண்டும் தாயகம் மீட்டு கொண்டு வந்ததை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும் சென்னை ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளிகளின் கல்வி பணிகளை பாராட்டியதுடன் அப்பள்ளிகளை நிர்வகிக்கும் கிரிஜாவின் தேச பணிகளையும் பாராட்டி பேசியது பெருமை அளிக்கிறது. இப்படி தொடர்ச்சியாக தமிழ் மொழி மற்றும் தமிழகத்தின் பெருமைகளை பறைசாற்றி வரும் பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.