புதுடெல்லி,
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி, கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், திமுக அரசு பதவிக்கு வந்த பிறகு அரசாணையிலும் வெளியிடப்பட்டது.
இதனிடையே, வன்னியர் சமூகத்திற்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து அவசரம் கருதி தினந்தோறும் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டி இருப்பதால் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டது. அதன்படி சிறப்பு வழக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு தினந்தோறும் விசாரணை நடைபெற்றது. அப்போது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் ரத்து செய்யப்படுவதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில் வன்னியர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 10.5 % உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்த ஐகோர்ட்டு மதுரை கிளையின் உத்தரவு தவறானது. மதுரை கிளை உத்தரவால் தமிழக அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து, இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு அதில் தெரிவித்துள்ளது.