தமிழக செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்வு

தொடர்மழையால் வரத்து பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்திருக்கிறது. குறிப்பாக தக்காளி விலை 2 மடங்கு அதிகரித்து ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினத்தந்தி

மழையால் வரத்து பாதிப்பு

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக காய்கறி பயிரிடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறி விலை வெகுவாகவே உயர்ந்திருக்கிறது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் அப்துல்காதர் கூறியதாவது:-

விலை கிடுகிடு உயர்வு

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினந்தோறும் சுமார் 250 லாரிகள் வரை காய்கறி விற்பனைக்காக வரும். இந்தநிலையில் விளைச்சல் பாதிப்பு எதிரொலியாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தற்போது 40 சதவீதம் வரை காய்கறி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் தேவை காரணமாக காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக கடந்த வாரம் ரூ.35-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை ஆகிறது. ரூ.80 வரை விற்பனையான முருங்கை ரூ.120-க்கும், பீன்ஸ், அவரை விலை தலா ரூ.20 அதிகரித்து ரூ.50-க்கும் விற்பனை ஆகின்றன.

அதேபோல பாகற்காய், வெண்டை, புடலங்காய், பச்சை மிளகாய், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, சாம்பார் வெங்காயம், கோவைக்காய் உள்ளிட்டவற்றின் விலை கடந்த வாரத்தைக் காட்டிலும் ரூ.10 உயர்ந்திருக்கிறது. முட்டைக்கோஸ், சுரைக்காய் ஆகியவற்றின் விலை ரூ.5 உயர்ந்திருக்கிறது. மழை நீடிக்கும்பட்சத்தில் வரும் நாட்களில் வரத்து இன்னும் பாதிக்கப்பட்டு காய்கறி விலை மேலும் உயரலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தக்காளி ரூ.70-க்கு விற்பனை

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம் வருமாறு (மொத்தவிலையில்/கிலோவுக்கு):-

பீன்ஸ்-ரூ.50, அவரை-ரூ.50, பாகற்காய் (பன்னீர்)-ரூ.45, பாகற்காய் (பெரியது)-ரூ.40, கத்தரி-ரூ.40, வெண்டை-ரூ.35 முதல் ரூ.45 வரை, புடலங்காய்-ரூ.30, கோவைக்காய்-ரூ.25 முதல் ரூ.40 வரை, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40 முதல் ரூ.45 வரை, பச்சை மிளகாய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.35, கேரட் (ஊட்டி)-ரூ.60, கேரட் (மாலூர்)-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, முட்டைக்கோஸ்-ரூ.20, இஞ்சி-ரூ.80, சாம்பார் வெங்காயம்-ரூ.75 வரை, பல்லாரி வெங்காயம் (நாசிக்)-ரூ.40 முதல் ரூ.50 வரை, பல்லாரி (ஆந்திரா) -ரூ.35 முதல் ரூ.40 வரை, தக்காளி-ரூ.60 முதல் ரூ.70 வரை, சேனைக்கிழங்கு-ரூ.30, சேப்பங்கிழங்கு-ரூ.35, காலிபிளவர் (ஒன்று)-ரூ.40, முருங்கை-ரூ.120, உருளைக்கிழங்கு-ரூ.35.

பழங்கள் விலையில்...

காய்கறியை போல வரத்து பாதிக்கப்பட்ட நிலையிலும், விற்பனை இல்லாத காரணத்தால் பழங்களின் விலையில் எந்த தாக்கமும் ஏற்படவில்லை. இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கத் தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறுகையில், மழை காரணமாக, ஏராளமான விவசாயிகள் விளைவித்த பழங்களை அனுப்பவில்லை. அதேவேளையில் மார்க்கெட்டில் வியாபாரமும் எதிர்பார்த்த அளவு இல்லை. தீபாவளி விற்பனை 30 சதவீதம்கூட நடைபெறவில்லை. இதனால் பழங்கள் விற்பனையாகவில்லை. விலையும் உயரவில்லை என்றார்.

அந்தவகையில் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்பிள் (சிம்லா) ரூ.90 முதல் ரூ.130 வரையிலும், ஆப்பிள் (டெலிசியஸ்) ரூ.100 முதல் ரூ.120 வரையிலும், சாத்துக்குடி, நாக்பூர் ஆரஞ்சு தலா ரூ.40 முதல் ரூ.50 வரையிலும், எகிப்து ஆரஞ்சு (மால்டா) ரூ.120 முதல் ரூ.130 வரையிலும், மாதுளை ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், சப்போட்டா, கொய்யா தலா ரூ.40-க்கும், திராட்சை (கருப்பு) ரூ.80-க்கும், திராட்சை (பன்னீர்) ரூ.90-க்கும், திராட்சை (விதையற்றது) ரூ.100-க்கும், பப்பாளி, தர்ப்பூசணி தலா ரூ.20-க்கும், வாழைத்தார் ரூ.200 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு