தமிழக செய்திகள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார் - வேலூர் மேயர் சுஜாதாவுக்கு சம்மன்

விளையாட்டு உபகரணங்களை விநியோகிக்க முயன்றதாக வேலூர் மேயர் மீது புகார் எழுந்துள்ளது.

வேலூர்,

இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுகணமே தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வேலூர் மேயர் சுஜாதா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி விளையாட்டு உபகரணங்களை விநியோகிக்க முயன்றதாக வேலூர் மேயர் சுஜாதா மீது புகார் எழுந்த நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வேலூர் மேயர் சுஜாதா, காரை நிறுத்தாமல் சென்றதால் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து வேலூர் மேயர் சென்ற காரை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வேலூர் மேயர் வரும் 23-ந் தேதி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சத்துவாச்சாரி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.