சென்னை,
சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் (IMU) புதிய துணைவேந்தராக டாக்டர் வெங்கட ரமண அக்கராஜு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வெங்கட ரமண அக்கராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 3-ந் தேதி அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
கடல்சார் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தின் தரத்தை மேலும் வலுப்படுத்துவதை நோக்கிய பல்கலைக்கழகத்தின் பயணத்தில், இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக கருதப்படுகிறது.
புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள அக்கராஜு, இதற்கு முன்பு புதிய மங்களூரு துறைமுக ஆணையத்தின் தலைவராக பணியாற்றியவர். துறைமுக நிர்வாகம், கடல்சார் செயல்பாடுகள் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் அவருக்கு ஆழ்ந்த அனுபவம் உண்டு.
கடல்சார் துறையில் அவர் கொண்டுள்ள சிறந்த அனுபவமும், தலைமைப் பண்பும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக செயல்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சர்வதேச கடல்சார் தொடர்புகளின் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் கடல்சார் துறை மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இத்தகைய முக்கியமான காலகட்டத்தில் வெங்கட ரமண அக்கராஜுவின் நியமனம் அமைந்துள்ளது.
புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள வெங்கட ரமண அக்கராஜுவை பல்கலைக்கழக சமூகம் அன்புடன் வரவேற்றுள்ளது. கடல்சார் கல்வியில் பல்கலைக்கழகம் புதிய மைல்கற்களை எட்டும் வகையில், அவரது பதவிக்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.