மதுரை,
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரை சாத்தான்குளம் போலீசார் விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் அப்போதைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கொலை வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்த நிலையில், பின்னர் வழக்கின் விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றம்சாட்டப்பட்ட 9 காவலர்கள் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதற்கிடையில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் அப்ரூவராக மாறுவதாக கூறியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த வழக்கின் விசாரணை நீண்டு கொண்டே சென்றது.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. தரப்பில் கூடுதலாக 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ப்பட்ட நிலையில், தொடர்ந்து கோர்ட்டில் சாட்சி விசாரணைகள் நடைபெற்று வந்தன. தற்போது அனைத்து தரப்பு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
இதன்படி சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் வரும் 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் நடந்து சுமார் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.