பராமரிப்பு இல்லாத பஸ்கள்
திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் அரசு பஸ்கள் முறையாக பராமரிப்பு இன்றி இயக்கப்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று முன்தினம் இரவு திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது கனமழை பெய்தது. இந்த நிலையில் பஸ்சில் உள்ள வைப்பர் (பஸ் கண்ணாடியை துடைக்கும் கருவி) வேலை செய்யவில்லை. இதனால் டிரைவருக்கு முன்புறம் உள்ள கண்ணாடியை கண்டக்டர் துடைத்துக்கொண்டே வந்தார்.
குடைபிடித்தபடி பயணம்
இதே போன்று அந்த பஸ்சில் உள்ள முன் பக்க விளக்கும் (ஹெட்லைட்) வேலை செய்யவில்லை என பயணிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் அந்த பஸ்சின் மேற்கூரை ஒழுகியதால் பயணிகள் குடைபிடித்த படி பயணம் செய்துள்ளனர். இதனை அதில் பயணம் செய்த ஒரு பயணி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த பகுதியில் இயங்கும் அரசு பஸ்களை பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.