சென்னை,
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள 'விடுதலை' திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபல திரையரங்கில், திரைப்படத்தை பார்ப்பதற்காக வந்தவர்களிடம் குழந்தைகளை அழைத்துச் செல்ல திரையரங்க ஊழியர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர்களுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், மக்கள் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த போலீசார் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை வெளியேற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர், குழந்தைகளுக்கு என்ன படம் காண்பிக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும் என்று கூறியதோடு, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதனையடுத்து வேறு வழியில்லாமல் போலீசார் அங்கிருந்து நகர்ந்த நிலையில், 'விடுதலை' திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது.