தமிழக செய்திகள்

வெற்றி பெற்ற தவெக எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் இன்று முக்கிய ஆலோசனை

தவெக வெற்றியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று காலை வெளியானது. நொடிக்கு, நொடி தேர்தல் முடிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆரம்பம் முதலே த.வெ.க. முன்னிலை வகித்தது. நேரம் செல்ல, செல்ல த.வெ.க. வெற்றி உறுதி செய்யப்பட் டது.

108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, த.வெ.க. தனிபெரும் கட்சியாக உருவெடுத்தது. த.வெ.க.வின் வெற்றியை தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் வெடி, வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளிலும் விஜய் வெற்றி வாகை சூடினார். தமிழகம் முழுவதும் த.வெ.க. வேட்பாளர்களின் வெற்றி செய்தியை கேட்டு, விஜய் உற்சாகம் அடைந்தார். வெற்றி பெற்றவர்கள் உடனடியாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று போன் மூலம் விஜய் அறிவுறுத்தினார்.

அதனை ஏற்று தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. வேட்பாளர்கள் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் அவர்களுடன் விஜய் உரையாட இருக்கிறார். வெற்றி பெற்ற வேட்பாளர்களை பாராட்டுகிறார். இந்த கூட்டத்தில் விஜய் சட்டசபை த.வெ.க. குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதற்கான கடிதத்தில் த.வெ.க. வேட்பாளர்கள் கையெழுத்திடுகின்றனர்.

இதற்கிடையே, த.வெ.க. சார்பில் யார்? யார்? அமைச்சர்களாக வர போகிறார்கள் என்பது குறித்த பட்டியலும் தயாரிக்கப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பே த.வெ.க. சார்பில் அமைச்சரவை பட்டியல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. நேற்றும் அந்த பட்டியல் வைரல் ஆகியது குறிப்பிடத்தக்கது.