தமிழக செய்திகள்

பொறுப்பு கவர்னரை சந்திக்க புறப்பட்டார் விஜய் - ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார்

தமிழகத்தில் ஆட்சியமைக்க பொறுப்பு கவர்னரிடம் விஜய் உரிமை கோர உள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்த கட்சிக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 118 தொகுதிகள் கிடைக்கவில்லை.

இதனால், தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்த காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.

இதனிடையே, தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்துள்ளார். இந்த நிலையில், பொறுப்பு கவர்னரை சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் பனையூரில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்து, தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக விஜய் உரிமை கோர உள்ளார்.