தமிழக செய்திகள்

வேட்பு மனுவில் சொத்து மதிப்பை குறைத்து காட்டியிருந்த விஜய்

புதிய வேட்பு மனுவில் இடம் பெற்றுள்ள தகவலின் விஜய்யின் சொத்து விவரங்களிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவை தவெக தலைவர் விஜய் கடந்த 30-ஆம் தேதி தாக்கல் செய்தார். இதில், தனக்கு இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள், தன் தந்தை, தாய், மனைவி, மகன் மற்றும் மகளுக்கு கொடுத்துள்ள கடன் தொகை விவரம் உள்ளிட்டவற்றை தெரிவித்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் தனது வேட்புமனுவில் எந்தவித காவல்துறை வழக்கும் இல்லை எனத் தெரிவித்து இருந்தார்.

பின்னர் கொளத்தூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி கிழக்கு தொகுதியில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்த விஜய், இந்த வழக்குடன் சேர்த்து 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கையும் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை ஏன் பெரம்பூர் மனு தாக்கலில் அவர் குறிப்பிடவில்லை என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து புதிய பிரமாணப்பத்திரம் விஜய் தரப்பில் பெரம்பூரில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், புதிய வேட்புமனுவில் இடம் பெற்றுள்ள தகவலின்படி விஜய்யின் சொத்து விவரங்களிலும் பல்வேறு குளறுபடிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் விவரம் வருமாறு: பழைய வேட்புமனுவில் கையில் ரூ.1.10 லட்சம் ரொக்கம் இருப்பதாக விஜய் குறிப்பிட்டிருந்தார். ஆனால் புதிய வேட்புமனுவில் ரூ.2 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். ஜெயாநகர் பிராப்பர்ட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் மொத்த பங்கு மதிப்பு பழைய வேட்புமனுவில் ரூ.19.03 லட்சம் என்று தெரிவித்திருந்தார். புதிய வேட்புமனுவில் ரூ.19.69 லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார்.

பழைய வேட்புமனுவில் டிஎன் 14 ஏஎஸ் 0277 என்ற பதிவெண் கொண்ட டாடா கேரவன் பேருந்தை காட்டவில்லை. தற்போது தாக்கல் செய்துள்ள புதிய வேட்புமனுவில் இந்த டாடா கேரவன் பேருந்தை காட்டியுள்ளார். இதன் மதிப்பு ரூ.6 கோடி எனக் காட்டியுள்ளார். இந்த பேருந்தைதான் விஜய் முதலில் பிரசாரத்திற்கு பயன்படுத்தி வந்தார். திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவிலும் கேரவன் வாகனத்தை விஜய் காட்டவில்லை.

அதேபோல், விஜய் 4-ஆம் தேதி தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் ரூ.410 கோடி அசையும் சொத்து இருப்பதாக காட்டியுள்ளார். 30-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவில் ரூ.404 கோடி அசையும் சொத்து இருப்பதாக கூறியிருந்தார். 2023-24 நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.105 கோடி என முதலில் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறிய விஜய், நேற்று தாக்கல் செய்த மனுவில் 2023-24 நிதி ஆண்டில் மொத்த வருமானம் ரூ.237 கோடி என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, கூடுதல் விவரங்களுடன் திருச்சி கிழக்கிலும் விஜய் தரப்பில் நேற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்த முரண்பாடுகள் களையப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.