காரைக்குடி,
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு உள்பட மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
காரைக்குடி தேவர் சிலை அருகே பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தேர்தல் கமிஷன் அதிகாரிகள், போலீஸ் அதிகாரி கள் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் புனியா மற்றும் அதிகாரிகள் குழுவினர் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கப் பட்ட தேவர் சிலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
காரைக்குடி தொகுதி வேட்பாளர் டி.கே.பிரபுவிடம் பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். சில நிபந்தனைகளுடன் விஜய்யின் பிரச்சார கூட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் என தமிழக வெற்றிக்கழக கழகத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில், காரைக்குடியில் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஏறாமல் இருக்க டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்கள், உயரமான மரங்களுக்கு பாதுகாப்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் பிரசாரத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.