சென்னை,
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவான த.வெ.க. 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. இந்த சூழலில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகரை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று சந்தித்து ஆட்சி அமைப்பதற்காக உரிமை கோரி உள்ளார். ஆனால் அதற்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
பொதுவாக முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி ஏற்கும் நிகழ்வுகள் மக்கள் பவனிலேயே நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரங்கின் உள்ளே உள்ள இருக்கைகள் சீரமைக்கப்பட்டு, மின் விளக்குகள், அகன்ற திரை, ஒலிபெருக்கி என்று பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன.
த.வெ.க. உடன் காங்கிரஸ் கட்சியும் கை கோர்த்துள்ளதால் விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதவிர முக்கிய பிரமுகர்களும் விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் அரசியல் மற்றும் விளையாட்டு சார்ந்த நிகழ்வுகள் நடைபெறும் முக்கிய இடமாக திகழ்கிறது.
மறைந்த தி.மு.க. தலைவரான கருணாநிதி கடந்த 2006-ம் ஆண்டு மே 13-ந்தேதி 5-வது முறையாக தமிழக முதல்-அமைச்சராக ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில்தான் பதவியேற்றார். அப்போது கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். கவர்னர் மாளிகைக்கு வெளியே நடைபெற்ற இந்த விழா அப்போது முக்கிய நிகழ்வாக அமைந்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் அதே போன்று ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில், விஜய் முதல்-அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் த.வெ.க தலைவர் விஜய் பதவியேற்பு விழாவுக்காக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. கவர்னர் தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்படாத நிலையில் பதவியேற்பு விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.