தமிழக செய்திகள்

விஜய்யை விமர்சித்து ஒட்டப்பட்டிருந்த பதாகைகளால் பரபரப்பு

பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த விஜய், நள்ளிரவு சென்னை நோக்கி திரும்பி சென்றார்.

பெரம்பலூர்,

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் பிரசாரம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதிக்கு மதியம் முதலே கட்சியினர், ரசிகர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் மாலை அப்பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது.

ஆனால் திருச்சி, அரியலூர், குன்னம் ஆகிய பகுதிகளில் வழிநெடுக கட்சியினர், ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் தாமதமாக இரவு பெரம்பலூர் நோக்கி வந்த விஜய் பிரசாரம் மேற்கொள்ளும் இடத்திற்கு செல்லாமலே, பிரசாரத்தை ரத்து செய்து விட்டு நள்ளிரவு சென்னை நோக்கி திரும்பி சென்றார். இதனால் பெரம்பலூர் மேற்கு வானொலி திடல் பகுதியில் விஜய்யை பார்ப்பதற்காக கடும் சிரமத்துடன் பல மணி நேரம் காத்திருந்த கட்சியினர், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

இந்தநிலையில் பெரம்பலூர் நகர்ப்பகுதியில் நேற்று காலை விஜய்யின் அரசியலை விமர்சித்து பல்வேறு இடங்களில் சுவர்களில் பதாகைகள் ஒட்டப்பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில், ஆங்கிலத்தில் புரோ பாலிடிக்ஸ் சாட்டர்டே பார்ட்டி இல்ல அது 24 X 7 டூட்டி, புரோ இது பொலிடிக்கல் யாத்ரா வா இல்ல... உங்க வீக் என்ட் கேட்வே வா!, புரோ அரசியல் வீக் என்ட் டிரிப் இல்ல... புல் டைம் ஜாப் புரோ, புரோ பாலிடிக்ஸ் நா ஏதோ வீக் என்ட் மூவி ரிலீஸ்னு நினைக்குறாரு என்பது உள்ளிட்ட வாசகங்கள் விஜய்யை விமர்சித்து இடம்பெற்றிருந்தது. இதனை பொதுமக்கள், விஜய்யின் ரசிகர்கள் நின்று படித்து சென்றதை காணமுடிந்தது. அந்த பதாகைகளை ஒட்டியவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.