சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் 3-வது ஆண்டு தொடக்க விழா சென்னையை அடுத்த பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நீல நிற மாருதி சிப்ட் காரில் புறப்பட்டார்.
இவரது கார் நீலாங்கரை மெயின் ரோட்டில் உள்ள சிக்னலை அடைந்தபோது, தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிப்காட் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைப்பதற்காக சிறுசேரி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
விஜய்யின் கார் நீலாங்கரையில் சிக்னலுக்கு வரும் நேரத்தில் தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த காரும் அந்தப் பகுதிக்கு வந்தது. அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு இருப்பதால், அவர் பயணம் செய்த சாலையை நோக்கி வந்த வாகனங்கள் எல்லாம் போக்குவரத்து போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதில்தான் விஜய்யின் காரும் சிக்கிக்கொண்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த கார், அந்த இடத்தை தாண்டிய பிறகே, விஜய் பயணித்த கார் உள்பட ஏனைய வாகனங்கள் குறிப்பிட்ட சாலையில் அனுமதிக்கப்பட்டன. இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது