தமிழக செய்திகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களிக்க டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பிரசாரம் நிறைவடையவுள்ளது. கடந்த இருவாரங்களாக நிலவிய பிரசாரம் சூடு தணிந்து, அமைதி நிலவக்கூடிய அடுத்த 48 மணி நேரம்தான் தமிழகத்தைத் தொடர்ந்து காப்பாற்ற மேற்கொள்ள வேண்டிய முடிவு குறித்து மக்கள் சிந்தித்து தீர்மானிப்பதற்கு மிகவும் சரியான நேரமாகும்.

தமிழ்நாட்டில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மைக்கு தேவையான ஆதரவைவிட கூடுதலாகவே சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். அதேநேரத்தில் தி.மு.க. இந்த இரு தொகுதிகளையும் வென்றால்கூட, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது குறித்து நினைத்துக்கூட பார்க்க முடியாது. அதனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது; ஆட்சிப் பயணத்திற்கு எந்த தடையும் ஏற்பட்டுவிடாது.

மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு சாத்தியமாகக் கூடிய வாக்குறுதிகளை அளிக்கும் அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி தான் இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும். இடைத்தேர்தலாக இருந்தாலும், பொதுத்தேர்தலாக இருந்தாலும் தி.மு.க. வெற்றிபெற்றால், அதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள் தான். அ.தி.மு.க. வெற்றிபெற்றால் இரு தொகுதிகளிலும் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மாறாக, தி.மு.க. வெற்றி பெற்றால் நிலங்களை அபகரிப்பது, கடைகளில் புகுந்து தாக்குவது போன்ற அத்துமீறல்கள் தான் நடக்கும். இவற்றையெல்லாம் மனதில்கொண்டு, விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்களிக்க வேண்டும்; தமிழகத்தில் அமைதியான ஆட்சி தொடர இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு