மதுரை,
தமிழகம் முழுவதும் வருவாய்த்துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடந்தது. இதில் ஆண்களும், பெண்களும் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களில், காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதற்கு, 13 ஆயிரத்து 958 பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில் நேற்று அதற்கான திறனறி தேர்வுகள் நடைபெற்றது.
வினாத்தாள் வெளியானது
இந்த நிலையில் கிராம உதவியாளர் தேர்வுக்காக ஏராளமானவர்கள் காத்திருந்த நிலையில், திடீரென நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வு மையத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆங்கிலத் திறனறி தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது.
மேலும் இதனை பதிவிட்டவர்கள், மொத்த வினாத்தாள்களையும் பெற ரூ.10 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய வினாத்தாள்
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட நிர்வாகத்தினர், உடனடியாக புதிய வினாத்தாள்களை தயார் செய்து தேர்வு எழுத வந்தவர்களுக்கு கொடுப்பதாக அறிவித்தனர். மேலும் வினாத்தாள்களை கசிய விட்டவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதுகுறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ஜெராக்ஸ் எடுக்க சென்ற இடத்தில் இந்த வினாத்தாள்கள் கசிந்ததாக தெரியவருகிறது. அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் போலீசிலும் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வினாத்தாளை கசிய விட்ட சம்பவம் தொடர்பாக, தெற்கு தாசில்தார் கல்யாணசுந்தரத்தை, நிர்வாக காரணங்களுக்காக பணியில் இருந்து விடுவித்துள்ளதாக கலெக்டர் அனீஷ்சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்தனர்
ஈரோட்டில் தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி அளிக்காததால் அவர்கள் ஹால் டிக்கெட்டை கிழித்து எறிந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்த ஹரிணிக்கு நேற்று காலை திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் கணவருடன் வந்து அவர் தேர்வு எழுதினார். அதே தேர்வு மையத்துக்கு மனைவியுடன் வந்த மற்றொரு புதுமாப்பிள்ளை தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கனகரத்தினம் என்ற பெண்ணின் தாயார் நேற்று முன்தினம் இறந்தார். இந்த துக்கத்திலும் அவர் தேர்வு எழுதினார்.