ரிஷிவந்தியம்
வாணாபுரம் பகண்டைகூட்டு ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்தினமாலா தலைமையில் நடைபெற்றது. ரிஷிவந்தியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமரன் வரவேற்றார். கூட்டத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள ஏணியில் வெளி ஆட்கள் ஏறாத வண்ணம் சிறிய அளவிலான இரும்பு கதவு அமைத்து பூட்ட வேண்டும் என ஊராட்சிகள் உதவி இயக்குனர் அறிவுறுத்தினார். மேலும் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பணிகள், மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தமாக பராமரித்தல், ஊராட்சிகளில் நிலுவையில் உள்ள மின்கட்டணத்தை உடனே செலுத்துதல், தேவையில்லாத இடங்களில் உள்ள மின் இணைப்பை துண்டித்து, பகல் நேரங்களில் மின்விளக்குகள் எரியாமல் இருப்பதை உறுதி செய்தல், விரைவில் அனைத்து கிராமங்களிலும் 'பைபர்நெட்' இணையதள சேவை வர உள்ளதால், கிராம சேவை மைய கட்டிடங்களை தயார்படுத்துதல், சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல், ஊராட்சிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழித்தல் உள்பட ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் குறித்து உதவி இயக்குனர் பேசினார். கூட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.