சிவகாசி,
சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் வழியில் மயிலாடும்பாறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் அதே பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்றனர். அப்போது சுடுகாட்டிற்கு செல்லும் வழியை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வேலி அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கிராம மக்கள், இறந்த பெண்ணின் உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர். மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்றால் சுமார் 1 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து போடப்பட்டதாக கூறப்படும் வேலியை அகற்றக்கோரி மயிலாடும்பாறை கிராம மக்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சிவகாசி கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வேலியை அதிகாரிகள் அகற்றி, சுடுகாட்டிற்கு செல்ல பாதையை ஏற்பாடு செய்து கொடுத்தனர். கிராம மக்களின் இந்த திடீர் சாலை மறியலால் சிவகாசி-சாத்தூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.