கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை தாலுகா களமருதூர் கிராமம் பெரியார் நகர் பகுதியில் வசிக்கும் பெண்கள் கலெக்டர் ஷ்ரவன்குமாரை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- நாங்கள் களமருதூர் பெரியார் நகரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அனைவரும் வறுமை கோட்டிற்கு கீழ் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். இதுவரை இங்கு வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை. களமருதூர் வருவாய் எல்லையில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. எனவே அந்த இடத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.