தமிழக செய்திகள்

மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது; அமைச்சர் கடம்பூர் ராஜு

மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது என அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆட்சியர் அலுவலகம் நோக்கிய பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் கலகக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பியதனை அடுத்து இன்று 144 தடை உத்தரவு முடிவுக்கு வந்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காயமடைந்தவர்களை அமைச்சர் கடம்பூர் ராஜு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் வழங்கினார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த அவர், கடந்த ஏப்ரல் 9ந்தேதி முதல் ஸ்டெர்லைட் ஆலை பணிகள் எதுவும் நடைபெறவில்லை. போராட்டம் நடத்திய மக்களுக்கு 98 நாட்களாக தமிழக அரசு பாதுகாப்பு அளித்தது.

மக்களின் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால், வன்முறை ஏற்பட்டது. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இங்கு வராமல் இருந்தேன். இந்த உத்தரவு நீக்கப்பட்டு இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பியுள்ளது. 100 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என கூறினார்.

வன்முறையில் பாதிக்கப்பட்ட 54 பேருக்கு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில், 7 பேருக்கு பிரேத பரிசோதனை நிறைவடைந்துள்ளது.

ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் உணர்வை போன்றே ஆலை இயங்க கூடாது என அரசும் எண்ணம் கொண்டுள்ளது. அதற்காக ஆலைக்கு தண்ணீர் மற்றும் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்