ராமேசுவரம்,
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபத்தில் பார்வையாளர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடையானது கடந்த ஆண்டு மார்ச் 21-ந்தேதி முதல் தொடங்கியது.அன்றிலிருந்து அப்துல்கலாம் மணிமண்டபம் மூடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து சுற்றுலா தலங்கள், அருங்காட்சியங்கள் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் ராமேசுவரம் பகுதியில் உள்ள அப்துல் கலாம் மணிமண்டபம் திறக்கப்படாமல் பார்வையாளர்கள் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே மிகவும் குறைந்து வருவதன் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மணிமண்டபமும் 1 ஆண்டுக்கு பிறகு இன்று முதல் திறக்கப்படுகிறது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் அப்துல் கலாம் நினைவிடத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் மற்றும் மணிமண்டபத்தில் உள்ள அப்துல்கலாமின் சாதனைகள் அடங்கிய புகைப்படங்களையும் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.