தமிழக செய்திகள்

ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்பவர்களுக்கு திருக்கோவில்களில் தயாராகும் மதியம் உணவை எடுத்து செல்ல தன்னார்வலர்கள் முன் வரலாம்; இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வேண்டுகோள்

அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளை கவனித்து கொள்பவர்களுக்காக திருக்கோவில்களில் இருந்து தயாராகும் மதிய உணவை எடுத்து செல்ல தன்னார்வலர்கள் முன் வரலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

கோவில்களின் அன்னதான கூடங்கள்

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் 38 ஆயிரத்து 661 கோவில்கள் இயங்கி வருகின்றன. இதில் 754 கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் அன்னதான கூடங்களில் தயார் செய்யப்படும் உணவுகளை பார்சல் செய்து, அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பார்வையாளர்களுக்கு வழங்கும் திட்டம் கடந்த 12-ந்தேதி தொடங்கியது.அந்தவகையில் தினமும் 1 லட்சம் பேருக்கு உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில்

வாகனங்கள் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

புதிய திட்டம்

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் ஒரு வார காலத்துக்கு தளர்வில்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அத்தியாவசிய சேவை பிரிவில் வராது என்பதால், கோவில்களில் இருந்து ஆஸ்பத்திரிகளுக்கு உணவு கொண்டு செல்லப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த பணிகளில் தொய்வு ஏற்பட்டு விடக் கூடாது என்பதால், தன்னார்வலர்கள் மூலம் இப்பணியை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

அரசு ஆஸ்பத்திரிகளுக்கு...

கொரோனா பரவல் அதிகம் உள்ள சூழலில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளை கவனித்து வரும் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கோவில்களில் இருந்து தினமும் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்தந்த கோவில்களின் நிதி வருவாய் மற்றும் சமையலறை கூட வசதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் தினந்தோறும் 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கும், பழனி தண்டாயுதபாணி முருகன் கோவிலில் 4 ஆயிரம் உணவு பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக வாகன வசதிகள் ஏற்பாடு செய்து இந்த

பணிகளை நாங்களே மேற்கொண்டு வந்தோம்.

தன்னார்வலர்களுக்கு அழைப்பு

இந்தநிலையில் இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், உணவு சப்ளை செய்யும் பணியில் தன்னார்வலர்களை ஈடுபடுத்திட முடிவு செய்துள்ளோம். எனவே வாகன வசதி, போதுமான ஆட்கள் வசதி உள்ளிட்டவை கொண்ட தன்னார்வலர்கள் தாமாகவே முன்வந்து இந்த சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம். இதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் அந்தந்த மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர்களை அணுகலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்