சென்னை,
கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6 ஆம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து மையங்களிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து இரு தேர்தல் பணியாளர்கள் எடுத்துச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் வாக்கு இயந்திரங்களைக் கொண்டு சென்றது மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, செய்தியாளர்களிடம் இன்று விளக்கமளித்தார். அப்போது அவர், ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்டது பழுதான மற்றும் 2 மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் தான் என்று தெரிவித்தார். மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் உள்பட 4 பேருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாக அவர் கூறினார்.
வேளச்சேரி தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தெரிவித்த சத்யபிரத சாகு, அந்த விவிபேட் இயந்திரம் 50 நிமிடம் பயன்பாட்டில் இருந்தகாகவும், அதில் மொத்தம் 15 ஒப்புகை சீட்டுக்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, இரு சக்கர வாகனத்தில் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றது தேர்தல் விதிகளுக்கு எதிரானது என்றும், வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுமா? என்பது குறித்து தலைமை தேர்தல் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.