சென்னை,
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் அனைத்து விதமான பயணிகள் போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. மேலும், ரெயில் நிலையங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க, ரெயில் நிலைய நடைமேடை டிக்கெட் கட்டணத்தை தெற்கு ரெயில்வே (பிளாட் பார்ம் டிக்கெட்) ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தியது. பின்னர் ஒரு சில நாட்களுக்கு பிறகு நடைமேடை டிக்கெட்டுகள் வழங்குவதும் ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில், தற்போது பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. பல சோதனைகளுக்கு பிறகே பயணிகள் ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக ரெயில்களில் பயணம் மேற்கொள்பவர்கள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நடைமேடை டிக்கெட்டுகளும் வழங்கப்படாததால் பயணிகளை வழியனுப்ப வருபவர்களுக்கு ரெயில் நிலையங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் தற்போது நடைமேடை டிக்கெட்டுகளை வழங்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில் நேற்று முதல் சென்னை ரெயில்வே கோட்டத்தில் சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி உள்ளிட்ட முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டும் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.
அதிலும், பொதுமக்கள், ரெயில் நிலையங்களில் பெருமளவில் கூடுவதை தவிர்க்க, நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இதையடுத்து ரெயில் நிலையங்களில் டிக்கெட் பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.