வெண்டாகோட்டை நசுவினி ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நசுவினி ஆற்றின் சிறிய அணைக்கட்டுபாலம்
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்டாகோட்டை ஊராட்சியில் 1975-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் வெண்டாகோட்டை நசுவினி ஆற்றின் சிறிய அணைக்கட்டுபாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த சிறிய அணைக்கட்டு பாலத்தில் தண்ணீர் தேக்கி வைத்து, இடது புறம் உள்ள வாய்க்கால் மூலமாக 2,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதேபோல் வலதுபுறம் உள்ள வாய்க்காலில் 1,010 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறுவதற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த சிறிய அணைக்கட்டு பாலம் கட்டப்பட்டு சுமார் 47 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் மண் மேடாகி ஆழமும், அகலமும் குறைவாக உள்ளது.
கடலில் கலப்பதை தடுக்க வேண்டும்
மழைக்காலத்தில் பாலம் நிரம்புவதால் வருகின்ற தண்ணீர் அடைப்புக்கு மேலே வழிந்தோடி நேரடியாக கடலில் சென்று கலக்கிறது. இந்த சிறிய அணைக்கட்டில் இருந்து வெளியேறுகிற தண்ணீரை பழஞ்சூர், பொன்னவராயன் கோட்டை, மங்கனக்காடு உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை சேமித்து வைத்தால் இன்னும் ஏராளமான விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் கடலில் வீணாக சென்று கலக்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நசுவினி ஆற்று தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.