கடையநல்லூர்:
கடையநல்லூர் அருகே பா.ஜனதா தொண்டர்கள் சென்ற வேன் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா பொதுக்கூட்டம்
தென்காசியில் பா.ஜனதா பாதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து பா.ஜனதா தொண்டர்கள் வேன்களில் வந்தனர். இரவில் பொதுக்கூட்டம் முடிந்ததும், வேன்களில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.
சாலை மறியல்
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி- திரிகூடபுரம் பகுதியில் பா.ஜனதாவினர் வந்த வேன் சென்று கொண்டு இருந்தது. அப்போது, அந்த வேன் மீது திடீரென்று தண்ணீர் பாட்டிலை மர்ம நபர்கள் வீசினர். உடனடியாக வேன் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த தொண்டர்கள் கீழே இறங்கினார்கள்.
மேலும், அந்த வழியாக மற்ற வேன்களிலும் தொண்டர்கள் வந்தனர். அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி திடீரென்று திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், சொக்கம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தண்ணீர் பாட்டில் வீசிய மர்மநபர்களை கண்டறிந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து சொக்கம்பட்டி போலீசில் புகார் அளித்துவிட்டு பா.ஜனதாவினர் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.