தர்மபுரி,
வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.
இந்த நிலையில் மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.