தமிழக செய்திகள்

“குடிப்பவர்கள் வாக்கு வேண்டாம்; குடிமக்களின் வாக்குதான் வேண்டும்” - சீமான்

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய சீமான், குடிப்பவர்கள் வாக்கு வேண்டாம்; குடிமக்களின் வாக்கு வேண்டும் என்று கூறினார். “தமிழகத்தில் சுமார் 2 கோடி பேர் குடிப்பழக்கத்தில் உள்ளனர். அவர்களின் வாக்குகள் பாதிக்கப்படும் என்பதால் எந்தக் கட்சியும் தேர்தல் வாக்குறுதியில் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கூறுவதில்லை,” என்றார்.

மேலும், “ஒரு நாட்டின் எதிர்காலத்தை குடிபோதையில் இருக்கும் ஒருவர் தீர்மானிக்கிறாரானால், அது உண்மையான குடியரசு நாடா அல்லது குடிகார அரசு நாடா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்,” எனவும் அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “எங்களுக்கு குடிப்பவர்கள் வாக்கு வேண்டாம்; பொறுப்புள்ள குடிமக்களின் வாக்கு தான் வேண்டும்,” என்று சீமான் வலியுறுத்தினார்.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க., நா.த.க. த.வெ.க. உள்பட அனைத்து கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.