தமிழக செய்திகள்

‘தமிழ்நாட்டின் ரெயில் திட்டங்களுக்கான நிதியை அதிகரித்துள்ளோம்’ - மதுரையில் பிரதமர் மோடி பேச்சு

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

மதுரை,

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன்படி, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையேயான 4-வது வழித்தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மரக்காணம்-புதுச்சேரி பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது;-

“சகோதர சகோதரிகளே, வணக்கம். பழமை வாய்ந்த புனித நகரமான மதுரைக்கு வருவதை பெரும் கவுரவமாக உணர்கிறேன். மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் நான் தலைவணங்குகிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தின் பெருமிதமான அத்தியாமம் இன்று தொடங்கியுள்ளது.

இன்று ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சிலவற்றை திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளோம். இந்த திட்டங்கள் இணைப்புத் திறனை மாற்றியமைத்து, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்தி, பல லட்சம் மக்களின் வாழ்க்கையை உருமாற்றக் கூடிய வகையில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும்.

உயர்தர கட்டமைப்பை உருவாக்குவது என்பது மக்களுக்கு அதிகார பங்களிப்பை வழங்குவது என்று பொருள். தமிழகத்தில் 9 வந்தே பாரத், 9 அம்ரித் பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் 4,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர்-கடற்கரை 4-வது வழித்தடம் தொடங்கப்பட்டுள்ளது. பரமக்குடி, ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படும். பரமக்குடி-ராமநாதபுரம் 4 வழிச்சாலைக்கு ரூ.1,800 கோடி ஒதுக்கப்படும். 4 வழிச்சாலை ராமேஸ்வரத்தில் சுற்றுலாவை அதிகரிக்கும்.

கடந்த 10 ஆண்டுகளில் ரெயில்வே துறை சரித்திர மாற்றங்களை அடைந்துள்ளது. எங்கள் அரசு வந்த பிறகு தமிழ்நாடு, ரெயில்வேக்கான நிதி ஒதுக்கீட்டை 9 மடங்கு அதிகரித்துள்ளோம். தமிழ்நாட்டில் 1,300 கிலோ மீட்டருக்கு அதிகமான புதிய ரெயில் தடங்கள் போடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 77 ரெயில் நிலையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. புதிய பாம்பன் பாலத்தை திறந்து வைப்பதற்கான நற்பெயர் எனக்கு கிடைத்துள்ளது. பாதுகாப்பு, செயல் திறனை அதிகரிக்கும் வகையில் சுரங்கப்பாதை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவது நமக்கு பெருமை. இந்தியா முழுவதும் 200 தொழில்துறை தொகுப்புகள் இனம்காணப்பட்டு ஊக்குவிக்கப்படும். 2047-க்குள் வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற உணர்வால் ஒன்றிணைக்கப்படுவோம்.

தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியமான பங்கை ஆற்றும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடையவும், மாநில முன்னேற்றத்தை உறுதி செய்யவும் மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.