சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வழியாக மக்களுக்கு உரையாற்றி இருக்கிறார். அந்த வீடியோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார். மு.க.ஸ்டாலின் உரையின் விவரம் வருமாறு:-
கடந்த 2 மாத காலமாக கொரோனாவை பற்றித்தான் பேசிக் கொண்டு இருக்கிறோம். அந்தளவுக்கு நாட்டை பாதித்து வருகிறது கொரோனா. ஊரடங்கினால் பெரும்பாலானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. அப்பாவி மக்கள் எந்த வழியும் இல்லாமல் ரோட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அரசாங்கம் பார்த்துக் கொள்ளும், என்று தி.மு.க. நினைக்கவில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களைப் பற்றிக் கவலைப்படுபவர்களாகத்தான் தி.மு.க.வினரை கருணாநிதி வளர்த்துள்ளார், நானும் அப்படித்தான் வளர்ந்துள்ளேன். உடனடியாக முன்வந்து கலைஞர் அரங்கத்தைத் தனி மருத்துவ வார்டுகளாக பயன்படுத்திக்கொள்ள அரசுக்கு ஒப்புதல் கொடுத்தோம். மக்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் கொடுத்தோம். இதனை ஒருமுகப்படுத்துவதற்காகவே ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தைத் தொடங்கினோம். அதற்காக ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தோம். பொதுமக்கள் உதவி கோரும் மையமாகவே எனது அலுவலகம் செயல்பட்டது.
கடந்த 40 நாட்களில் 18 லட்சம் பேர் எனது அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்கள். உதவி பெற்றவர்கள் கொடுத்து வரும் பேட்டிகளைப் பார்க்கும் போது எனக்குப் பெருமையாகவும் மனநிறைவாகவும் இருக்கிறது. அதேபோல், உங்களின் உதவியையும் பெறுவதற்கு நாங்கள் நல்லோர் கூடம் என்ற மெய்நிகர் தளத்தை உருவாக்கினோம். இதுவரை லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி கிடைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னையின் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று நிவாரண உதவிகள் வழங்கினேன். மாநிலம் முழுவதும் தி.மு.க.வினர் இந்த பணியில் ஈடுபட்டார்கள். இவை அனைத்தையும் சென்னையில் இருந்தே நான் மேற்பார்வை பார்த்து வந்தேன். தினந்தோறும் காணொலிக் காட்சிகள் மூலமாக அனைவரிடமும் பேசி வந்தேன். எனக்கே இது வித்தியாசமான அனுபவம் ஆகும். இதுவரை 50-க்கும் மேற்பட்ட காணொலி காட்சிக் கூட்டங்களை நான் நடத்தி இருக்கிறேன். கொரோனா காலத்திலும் வீட்டில் நான் தனியாக இல்லை. உலக மக்களோடு ஒருவனாக, அவர்களது துன்ப துயரங்களைச் செவிமடுத்துக் கேட்பவனாக இருந்தேன். மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் அரசாங்கத்தின் வசம் ஒப்படைத்துள்ளோம். 7 லட்சம் கோரிக்கை மனுக்களை, மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.
இந்த கடினமான சூழ்நிலையிலும் தி.மு.க. மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி. நிவாரண பணியில் பங்கேற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. நம் அனைவரின் ஒன்றுபட்ட பலமே தமிழ்நாட்டை இந்த பேரிடரிலிருந்து மீட்கும் பாலமாக அமையும். நாம் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட்டால் இந்தப் பேரிடரிலிருந்து எளிதாக மீள முடியும். வருகின்ற காலம் சவாலான காலம். இன்னும் நோய்த் தொற்று முழுமையாகக் குறையவில்லை. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் கேள்விக்குறியான நிலையில் உள்ளது.
நமக்கு நாமே துயரங்களைத் துடைக்க முடியும் என்பதை ஒன்றிணைவோம் வா திட்டம் உணர்த்தி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலமாக நான் கண்டது நம் மக்களின் நம்பிக்கை, இரக்க குணம். இதன் மூலமாக நமக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று நம்பிக்கை பிறக்கிறது. ஒன்றுபட்டு தமிழகத்தின் பெருமையை, வளத்தை மீண்டும் மீட்டெடுப்போம். அதுவரை நானும் தி.மு.க.வும் உங்களின் குரலாக இருந்து ஒலிப்போம், உங்களுடன் துணைநிற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.