சென்னை,
ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள், களத்தில் ஒற்றுமையாக நின்று தீயசக்தியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தியாகத்தலைவிக்கான வரவேற்பை தமிழகத்தின் பெருவிழாவாக மாற்றியவர்கள் புரட்சித்தலைவி அம்மாவின் உண்மைத் தொண்டர்கள். களத்திலும் இதே உணர்வோடு ஒற்றுமையாக நின்று தீயசக்தி தி.மு.கவை வீழ்த்துவதிலேயே முழு கவனமும் இருக்க வேண்டும்.வெறும் திருவிழா அல்ல தமிழகத்தின் பெருவிழா என்று நடத்தி காட்டி விட்டீர்கள். எதனோடும் ஒப்பிடமுடியாத பாசத்தை உங்களின் கண்களிலும் கண்ட போது கலங்கினேன்.
கூட்டம் கூட்டுவதே தொண்டர்களை தூண்டிவிட்டு, வன்முறையை நிகழ்த்தி பொதுச் சொத்துக்களை சூறையாடி, மக்களை அச்சுறுத்தி பலத்தை காண்பிக்க தான் என்று நினைக்கும் சில தலைவர்களுக்கு மத்தியில் நீங்கள் மட்டும் எப்படி இந்த மாயாஜாலத்தை நிகழ்த்தினீர்கள் என எல்லோரும் கேட்கின்றனர். சத்தியப்போராட்டத்தில் நமது வெற்றியை நாளைய சரித்திரம் பேசட்டும் என்று அதில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.