தமிழக செய்திகள்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று சுதந்திர தின உரையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதியளித்தார்.

சுதந்திர தின விழா புதுவை கடற்கரை காந்தி திடலில் நேற்று நடந்தது. விழாவில் தேசியக்கொடியேற்றி வைத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:-

காய்கறி தோட்டம்

புதுவை மாநிலத்தில் மீண்டும் நேர்மையான வெளிப்படையான மக்களாட்சி மலர்ந்திட அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து 4-வது முறையாக எனது தலைமையிலான ஆட்சியை பொறுப்பேற்க செய்திருக்கிறீர்கள். எமது அரசு மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் ஆழத்தை நன்கு அறிவேன். உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாய்ப்பை தொடர்ந்து சேவை செய்ய பயன்படுத்துவேன்.

நமது மாநிலம் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது என்பதை உணர்ந்து எனது அரசு விவசாயிகள் சந்திக்கும் சவால்களுக்கு தீர்வுகாணவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், விவசாயிகளின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்கள், காய்கறி தோட்டம் அமைக்க ரூ.3 ஆயிரம் மதிப்பிலான விதைகள் மற்றும் தோட்டக்கலை உபகரணங்கள் அடங்கிய பைகள் 75 சதவீத மானியத்தில் வினியோகிக்கப்பட உள்ளது.

பால்வள வாரியத்துடன் ஒப்பந்தம்

பாண்லே நிறுவனம் ஐஸ்கிரீம் உற்பத்தி திறனை நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டரில் இருந்து 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த தேசிய பால்வள வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த திட்ட மதிப்பு ரூ.12 கோடியே 95 லட்சமாகும். மொத்த மதிப்பில் 80 சதவீதமான ரூ.10 கோடியே 36 லட்சத்தை குறைந்த வட்டி கடனாக வழங்க தேசிய பால்வள வாரியம் முன்வந்துள்ளது. புதுவை மாநிலத்தை பசுமையான மாநிலமாக மாற்ற 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற தினத்தன்று முதியோர் உதவித்தொகையை கூடுதலாக ரூ.500 உயர்த்தியும் கூடுதலாக 10 ஆயிரம் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கிடவும் முதல் கையெழுத்திட்டிருந்தேன். அவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது. விடுபட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மீனவ சமுதாய மக்களுக்கு ஓய்வூதியம் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.

நிதி உதவியை உயர்த்த...

மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், கடல்நீரின் தன்மையை நிகழ்நேரத்தில் அறியும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது. புதுவையில் கடலின் தன்மையை அறியும் கருவிகள் பொருத்திய மிதவை துறைமுக பகுதியில் இருந்து 1.5 கி.மீ. தூரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி கடலோர பகுதியின் நீரின் தன்மையும், வளமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும். இதன்மூலம் கடல் மாசுபடுவதை தடுக்கும் திட்டங்களுக்கும், மீன்வளம் மற்றும் கடலோர சுற்றுலா வளர்ச்சி திட்டங்களுக்கும் தேவையான தகவல்கள் தொடர்ச்சியாக பெறப்படும்.

புதுச்சேரி யூனியன் பிரதேசமானது மத்திய நிதிக்குழுவிலோ, யூனியன் பிரதேசத்துக்கான நிதிக்குழுவிலோ சேர்க்கப்படவில்லை. எனவே வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு வழங்கி வரும் 60:40 என்ற விகிதாச்சாரத்தை 90:10 என்று வழங்கவேண்டும் என்று நிதி ஆயோக் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசின் நிதியுதவியையும் உயர்த்தி வழங்கவேண்டும் எனறு வலியுறுத்தப்பட்ட உள்ளது.

இழப்பீட்டு காலத்தை நீட்டிக்க...

சரக்கு மற்றும் சேவை வரியின் இழப்பு 2022-க்கு பிறகு ரூ.140 கோடியாக இருக்கும். எனவே மத்திய அரசு இழப்பீட்டு காலத்தை 5 ஆண்டுகளுக்கு மேல்நீட்டிக்க வேண்டும் அல்லது இழப்பினை ஈடுசெய்ய கூடுதல் நிதி வழங்கவேண்டும். பொதுமக்கள் கணினி மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ நிலவரி திட்ட நகல், பட்டா நகல், புலப்பட நகல் ஆகியவற்றை இணையதளம் மூலம் ரூ.50 கட்டணம் செலுத்தி பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

அரசு திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய அரசு எந்திரம் வேகமாக செயல்படுவது அவசியமாகும். எனவே அனைத்து அரசுத்துறைகளிலும் காலியாக உள்ள சுமார் 10 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப உரிய நடவடிக்கைகளை எனது அரசு துரிதப்படுத்தியுள்ளது.

அரசுத்துறைகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும். பாரம்பரியமிக்க ரோடியர் தொழிற்சாலையை தனியார் பங்களிப்புடன் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் வாக்குறுதிகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் நகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நகரம் முழுவதும் இரும்பு கம்பங்கள் பொருத்தப்பட்டு அவற்றில் வை-பை வசதி, மின்சார வாகன மின்கலத்துக்கான மின்னூட்ட கருவி, காற்றின் தரம் அறிதல், அவசர கால உதவிக்கு அழைக்கும் தொலைபேசி, மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும். இந்த கம்பங்களை கண்காணிக்க ரோடியர் மில் வளாகத்தில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது.

அடுக்குமாடி வாகன நிறுத்துமிடங்கள் பழைய சிறைச்சாலை வளாகத்திலும், பழைய துறைமுக வளாகத்திலும் கட்டப்படும். இப்பணி இந்த நிதியாண்டிலேயே தொடங்கப்படம். காமராஜர் மணிமண்டபமும் விரைவில திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பினை தடுக்க இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் எந்தவித தயக்கமோ, அச்சமோ இன்றி தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுக்கும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசினார்.