தமிழக செய்திகள்

‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க துணையாக இருக்க மாட்டோம்’; கனிமொழி எம்.பி. பேட்டி

‘ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க துணையாக இருக்க மாட்டோம் என தி.மு.க. தெளிவுபடுத்தி உள்ளது’ என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

தினத்தந்தி

இடைக்கால அறிக்கை

இதுகுறித்து அவர் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஒருநபர் ஆணைய விசாரணை நீதிபதி அருணாஜெகதீசன் கடந்த 14-ந் தேதி இடைக்கால ஆய்வு அறிக்கையை அரசிடம் வழங்கினார். இதைத்தொடர்ந்து தமிழக அரசு மிக விரைவாக செயல்பட்டு ஒரு வாரத்துக்குள் அறிக்கை மீது நடவடிக்கை எடுத்து உள்ளது. மதுரை வந்த முதல்-அமைச்சர், ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உறவினர்களுக்கு கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பு வழங்கி உள்ளார். அது மட்டுமின்றி, துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீண்டநாள் கோரிக்கையை ஏற்று கல்வித்தகுதிக்கு ஏற்ப வேலைவாய்ப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

வழக்குகள் வாபஸ்

அதுமட்டுமின்றி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் எந்தெந்த வழக்குகளை அரசால் திரும்ப பெற முடியுமோ அந்த வழக்குகளை எல்லாம் திரும்ப பெறுவதாக முதல்-அமைச்சர் தெரிவித்து உள்ளார். அவருக்கு தூத்துக்குடி மாவட்ட மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 22-ந் தேதி துப்பாக்கி சூடு நடைபெறுவதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டு உச்சநீதிமன்றத்தில் இல்லாத வழக்குகள், 22-ந் தேதி பொது, தனியார் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் திரும்ப பெறப்படும் என்றும் முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். போலீசாரால் கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள், மன உளைச்சல் அடைந்தவர்கள் 93 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது. வேறு ஒரு வழக்கில் தண்டனை பெற்று இறந்தவரின் தாயாருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படுகிறது.

படிப்படியாக நடவடிக்கை

எத்தனை பேர் மீது உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்பது அரசாரணை வெளிவரும் போது தெரியவரும். உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்குகளையோ, சி.பி.ஐ. விசாரணையில் உள்ள வழக்குகளையோ வாபஸ் பெற முடியாது. ஒவ்வொரு படியாகத்தான் தாண்ட முடியும். ஒரேயடியாக தாண்டினால் அனைத்தும் பிரச்சினையாகி விடும். அதனால் படிப்படியாக முதல்-அமைச்சர்

நடவடிக்கை எடுத்து வருகிறார். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்குகள் எதுவும் வாபஸ் பெறப்படவில்லை. தவறான எந்த முன்னுதாரணமும் வந்து விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது என்று கருதுகிறேன். மக்களுக்கு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார். ஸ்டெர்லைட் பிரச்சினையில் மிக முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. பலருக்கு பாஸ்போர்ட் இல்லை. இதனால் வழக்குகள் திரும்ப பெறப்படுவதால் அவர்கள் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல முடியும்.

துணையாக இருக்க மாட்டோம்

ஒருநபர் விசாரணை ஆணையர் அருணாஜெகதீசன், கொரோனா காலமாக இருப்பதால் விசாரணையை தொடர்ந்து நடத்த முடியவில்லை. கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் முழு விசாரணையையும் முடித்து, முழு அறிக்கையை சமர்ப்பிப்பதாக கூறி உள்ளார். நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க துணையாக இருக்க மாட்டோம் என்பதை தி.மு.க. பலமுறை தெளிவாக கூறி உள்ளது. தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கிறோம். போர்க்கால நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தல் நேரத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். இதனால் கொரோனா கட்டுக்குள் வந்தவுடன் வேலைவாய்ப்பை அதிகரிக்க, சுற்றுச்சூழலை பாதிக்காத தொழிற்சாலைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்