சென்னை,
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி காலை 6.29 மணிக்கு இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள், இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா, தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.
இந்தியாவில் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி ஏற்படுத்தியது. இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது. சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்த 133 அடி உயர திருவள்ளுவர் சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் மறக்க இயலாது.
16 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட இந்த பேரழிவின் நினைவுகள் இன்றும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கின்றன. 2004-ம் ஆண்டு சுனாமியில் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள் என்று கணக்கீடுகள் கூறுகின்றன. இந்த ஆழிப்பேரலையில் தங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள் இன்று வரை அந்த சோக நினைவுகளை நெஞ்சில் சுமந்தபடி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்றையை தினம் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், 2004 டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம்! உடைமை இழந்தோரின் உரிமை காப்போம் என்று பதிவிட்டுள்ளார். மேலும் சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.