சென்னை,
நீயின்றி நான் இல்லை...இது காதலர்களுக்காக எழுதப்பட்ட வாசகம் என்று எவரேனும் கூறினால், அவர் பாட்டாளிகளின் பாசம் அறியாதவர் என்று பொருள். உண்மையில் இந்த வாசகம் நமக்காக படைக்கப்பட்டது. உன்னையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்பதற்கான சாசனம் தான் இதுவாகும். இது வன்னியர் இடப்பங்கீட்டுக்கான போராட்டங்களுக்கும், அதில் நாம் வென்றெடுத்த வெற்றிக்கும் மிகவும் பொருந்தும்.
வன்னியர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் முதற்கட்டமாக 10.50 சதவீத இடப்பங்கீட்டை வென்றெடுத்துள்ளோம். வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை வென்றெடுத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீயும் மகிழ்ச்சியாக இருக்கிறாய் என்பதை இடைவிடாமல் வந்த தொலைபேசி அழைப்புகளில் இருந்தே நான் உணர்ந்து கொண்டேன்.
கடந்த சில மாதங்களை போராட்டக்களத்தில் கழித்த நாம் இப்போது கொண்டாட்ட களத்திற்கு வந்திருக்கிறோம். வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் வீடு வீடாக செல்லுங்கள்... நாம் வென்றெடுத்துள்ள சமூகநீதி சாதனைகளை எடுத்துக் கூறி, அதன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளும் வகையில் வீட்டில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்குங்கள். அடுத்தக்கட்டமாக வன்னியர்களுக்கான 10.50 சதவீத இட ஒதுக்கீட்டின் பயன்களை விளக்கும் துண்டறிக்கையை அனைத்து சொந்தங்களின் வீடுகளுக்கும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும்.
நாம் இன்னும் வென்றெடுக்க வேண்டிய உரிமைகள் ஏராளமாக உள்ளன. அவை அனைத்தையும் நாம் வென்றெடுப்போம். நான் எனது முத்துவிழாவில் கூறிய அதே வாக்குறுதியை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வழங்குகிறேன். என்னை நோய் அதிகம் தாக்காமலிருந்தால், கோல்களை ஊன்றிச் சென்றாவது இந்த ஊமை சனங்களுக்காக நான் இறுதி வரை போராடுவேன்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.