சென்னை,
தமிழக ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து அ.தி.மு.க. அரசு மற்றும் அமைச்சர்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ஊழல் புகார்கள் அடங்கிய அறிக்கையை கொடுத்தது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் இன்று பதிலளித்தபொழுது, தி.மு.க.வின் ஊழல் குற்றச்சாட்டுகள் பற்றி ஆளுநரே முடிவு செய்ய முடியும். தமிழக அரசியலில் ஊழல் இல்லை என கூறியுள்ளார்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்ற பின் எதிர்கால அரசியல் திட்டம் மற்றும் சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க. அழகிரி, வரும் ஜனவரி 3ந்தேதி மதுரையில் எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி முடிவு எடுப்பேன்.
கட்சி தொடங்கும்படி ஆதரவாளர்கள் கூறினால், கட்சி தொடங்குவேன். ரஜினிகாந்த் சென்னை வந்தவுடன் அவரை கண்டிப்பாக நேரில் சந்திப்பேன். பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க ரஜினியை நேரில் சந்திப்பேன் என கூறினார்.
தேர்தலில் தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு, தி.மு.க.வில் இருந்து இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை. வரும் தேர்தலில்
தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினார்.
இந்நிலையில், மு.க. அழகிரி பா.ஜ.க.வுக்கு வந்தால் வரவேற்போம் என பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் கூறியுள்ளார்.