தமிழக செய்திகள்

தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு

திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

திண்டுக்கல்:

தேஜஸ் ரெயில்

சென்னையில் இருந்து மதுரைக்கு வாரத்தில் 6 நாட்கள் பகலில் தேஜஸ் சொகுசு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் எழும்பூரில் இருந்து தினமும் காலை 6 மணிக்கு புறப்பட்டு, திருச்சி, கொடைரோடு ரெயில் நிலையங்களில் நின்று மதுரைக்கு மதியம் 12.15 மணிக்கு சென்றடையும்.

அதேபோல் மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் கொடைரோடு, திருச்சி ரெயில் நிலையங்களில் நின்று எழும்பூருக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடையும்.

முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரெயில் 6.15 மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரை சென்றடைகிறது.

இந்த நிலையில் தேஜஸ் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள், வணிகர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மலர் தூவி வரவேற்பு

இதையடுத்து சோதனை அடிப்படையில் 6 மாதங்கள் தேஜஸ் ரெயில் கொடைரோடுக்கு பதிலாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும். பயணிகள் வருகையை பொறுத்து தொடர்ந்து திண்டுக்கல்லில் தேஜஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

அதன்படி நேற்று காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட தேஜஸ் ரெயில் 11.03 மணிக்கு திண்டுக்கல் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், வணிகர்கள் மேளதாளம் முழங்க ரெயில் என்ஜின் மீது மலர் தூவி வரவேற்பு கொடுத்தனர்.

பின்னர் என்ஜின் டிரைவர்கள், ரெயில்வே அதிகாரிகளுக்கு வணிகர்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பின்னர் 11.05 மணிக்கு தேஜஸ் ரெயில் மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது.

ரூ.840 கட்டணம்

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தேஜஸ் ரெயில் தற்போது திண்டுக்கல்லில் நின்று செல்கிறது.

இந்த ரெயில் சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு 5 மணி நேரத்தில் வந்தடையும்.

இதற்கான குறைந்தபட்ச கட்டணமாக ரூ.840 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு