குஜிலியம்பாறை ஒன்றிய தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள சி.சி. குவாரியில் நடந்தது. கூட்டத்துக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். குஜிலியம்பாறை ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். வேடசந்தூர் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், கவிதாபார்த்திபன், வடமதுரை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசும்போது, பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல் வடிவம் கொடுத்தார். அரசு பஸ்களில் இலவச பயண திட்டத்தின் மூலம் ஒரு கோடி பெண்கள் பயன் அடைந்துள்ளனர். பொருளாதார சமத்துவம் ஏற்படும் வகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை வழங்கியது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி ஆகும் என்றார்.
இதைத்தொடர்ந்து அவர், 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக கரிக்காலி ஊராட்சி கண்ணுமேய்க்கிபட்டியில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஜீவா, ஒன்றிய அவைத்தலைவர் சம்பத், ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து, கரிக்காலி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.