விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு 1,004 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டு மனை பட்டாக்களையும், 259 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.30 கோடியே 3 லட்சம் மதிப்பிலான வங்கிக்கடன் உதவிகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
அங்கீகாரம்
ஒரு காலத்தில் மாற்றுத்திறனாளிகளை அலட்சியமாக பார்ப்பதும் அவர்களின் குறைகளை சொல்லி கேலி செய்யும் போக்கு இருந்ததை போக்கி சமூக அங்கீகாரம் வழங்கியதும் ஊனமுற்றோர் என்று இருந்ததை மாற்றுத்திறனாளிகள் என மாற்றியும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமுதாயத்தில் மிகப்பெரிய அங்கீகாரத்தை வழங்கியவர் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி.மேலும் மகளிர் சுய உதவிக்குழுவினரை உருவாக்கி அதற்கு உயிரோட்டம் தந்தவரும் கருணாநிதி தான்.
தற்போது முதல்-அமைச்சர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மகளிர் உரிமைத்தொகை தகுதி உடைய அனைவருக்கும் கிடைக்கும். கிடைக்காதவர்கள் மறுபடியும் பதிவு செய்து உரிமைத்தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமுதாய வளர்ச்சி
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது:-
இந்த சமுதாயத்தில் வளர்ச்சி மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து சமமான வனர்ச்சியாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் காலங்காலமாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து சமுதாயத்தில் பிற மக்கள் பெறும் வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்கும் தர வேண்டும் என்ற மிகுந்த கவனத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுவது சலுகை அல்ல. அது அவர்களது உரிமை.
மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்குவதிலும் மிகுந்த முனைப்போடு செயலாற்றுகிறோம். நீண்ட காலம் நீடித்த நிலையான வளர்ச்சி பெற சமுதாய வளர்ச்சி வேண்டும். அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், சாத்தூர் ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.