சென்னை,
தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் 17-வது சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தேசிய கட்சியான காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. கடந்த தேர்தலிலும் (2021) இதே கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதாவது, ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று தொடர்ந்து தி.மு.க.விடம் கோரிக்கை வைத்து வருகிறது.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இருந்தபோது, "மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி" என்பதையே தாரக மந்திரமாக கூறிவந்தார். ஆனால், இப்போது 'ஆட்சியில் பங்கு' என காங்கிரஸ் கேட்கத் தொடங்கி இருப்பது தி.மு.க. தலைமையை எரிச்சலடையச் செய்துள்ளது. இதனால், காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு வார்த்தையை தொடங்காமல் இழுத்தடித்து வந்தது.
'ஆட்சியில் பங்கு' விவகாரம் தொடர்பாக, தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்ட நிலையில், "யாரும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கக்கூடாது" என இருகட்சி தலைமையும் தங்களுடைய தொண்டர்களுக்கு உத்தரவு போட்டது. ஆனாலும், நீருபூத்த நெருப்பாக பிரச்சினை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ராகுல்காந்தி, "இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு வேண்டும். 41 சட்டசபை தொகுதிகளும், 2 ராஜ்ய சபா சீட்டும் வேண்டும். உள்ளாட்சி தேர்தலிலும் 20 சதவீதம் இடம் வேண்டும்" என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
ராகுல்காந்தியின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்த கனிமொழி எம்.பி., "ஆட்சியில் பங்கு என்பதை ஏற்கவே முடியாது. சட்டசபை தொகுதிகளும் கடந்த முறையைவிட 2 கூடுதலாக தரலாம் (27 தொகுதிகள்). ஆனால், 2 ராஜ்ய சபா சீட், உள்ளாட்சி தேர்தலில் 20 சதவீதம் இடம் என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை" என்று தடாலடியாக கூறிவிட்டதாக தெரிகிறது.
மொத்தத்தில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில், தி.மு.க. கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்பு இருப்பதாக கனிமொழி எம்.பி. கூறியிருக்கிறார்.
அதாவது, கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினாலும், புதிய கட்சிகளை கொண்டு அதனால் ஏற்படும் வாக்கு இழப்பை சரிசெய்துவிடலாம் என்றும் தி.மு.க. தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.