தமிழக செய்திகள்

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கினால் என்ன? - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. இதேபோல் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு வழங்க மறுத்து தமிழக அரசு 2018-ல் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, பணியிலுள்ள முப்படை வீரர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் தனி ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக்கோரி தமிழக அரசு உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

பின்னர் நீதிபதிகள், இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளன. ஆண்டுதோறும் மருத்து இடங்கள் அதிகரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பணியிலுள்ள ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீடு இடங்கள் அதிகரிக்கப்படுகிறதா? தமிழகத்தில் 2015 - 2020 வரை மருத்துவ மாணவர் சேர்க்கையில் ராணுவ வீரர்களுக்கான இடங்கள் எத்தனை அதிகரிக்கப்பட்டது? அதில் முன்னாள் இராணுவ வீரர்களின் வாரிசுகள் எத்தனை பேர் விண்ணப்பித்தனர்? அவர்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை நவ. 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது