சென்னை.
தமிழக சட்டம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும், தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன் (வயது 87). அவருக்கு வயதுமூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது ஆஸ்பத்திரியில் அனுமதியாகி, சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் தவறி விழுந்ததாக தெரிகிறது. இதனையடுத்து, அவருடைய குடும்பத்தினர் அவரை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆஸ்பத்தியில் அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு சென்று அமைச்சர் துரைமுருகனை சந்தித்து உடல்நலம் விசாரித்தார். தொடர்ந்து, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை குறித்து தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அமைச்சர் துரைமுருகன் கால் வலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. கால் வலிக்கு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் சில நாட்களுக்கு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.