விஸ்வரூபம் எடுத்த 2-வது அலை
தமிழகத்தில் கொரோனா பரவலின் முதல் அலை ஓரளவு கட்டுக்குள் இருந்த நிலையில், தேர்தலுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்த கொரோனாவின் 2-வது அலை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் குறைந்த பாடில்லை.இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள மு.க.ஸ்டாலின், கடந்த 13-ந் தேதி அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டி, அவர்களுடன் கொரோனா பரவலை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 கட்சி உறுப்பினர்களைக் கொண்ட அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டது.இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.
முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும்
இந்த கூட்டத்தில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விதிக்கப்பட்ட முழு ஊரடங்குக்கு பிறகும் கொரோனா பரவல் குறையாதது குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது. மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. அனேகமாக 24-ந் தேதி முதல் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்றே தெரிகிறது.