சென்னை,
தமிழகம் முழுவதும் நீர்நிலைகளில், குறிப்பாக கோவில் தெப்பக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பலர் மூழ்கி இறப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் கோடீஸ்வரி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை பதில் அளிக்கும்படி ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
அனைத்து கோவில் திருக்குளங்களின் நுழைவு வாயிலை பூட்டி வைக்கவும், குளத்தை சுற்றி தடுப்பு வேலிகளை அமைக்கவும், பக்தர்கள் யாரும் இந்த குளத்துக்கு அருகே செல்லாதவாறு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் காவலாளியை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தெப்பத் திருவிழாவின்போது தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வீரர்களை பணியமர்த்த வேண்டும். நீச்சல் வீரர்களை உதவிக்காக அருகில் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல கன்னியாகுமரி, ராமேசுவரம், திருச்செந்தூர் உள்ளிட்ட கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கோவில்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் 2 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.