தமிழக செய்திகள்

சிகிச்சைக்கு பணம் கொண்டு சென்றால் வாட்ஸ்-அப் ஆதாரம் போதும்: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு

நகர்ப்புறத்தில் வாக்குப்பதிவை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம் என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. ஓட்டு எண்ணிக்கை மே 4-ந் தேதி நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து வாகன சோதனை கள் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது அரசு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி பொதுமக்கள் யாரும் தேர்தல் நடவடிக்கைகள் முடியும்வரை அதாவது வரும் மே 6-ந் தேதிவரை தனிநபராக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தொகையை எடுத்துச் செல்ல முடியாது. அப்படி கொண்டு செல்வதாக இருந்தால், அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பறக்கும்படையினர் அந்தத் தொகையை பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று காலை வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி, இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அவற்றில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் மதிப்பு மட்டும் ரூ.92.02 கோடியாகும். ரூ.72 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களும் பிடிபட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளால் பணம் கொண்டு செல்வதில் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு எடுத்துச்செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்களை தொல்லை செய்யக்கூடாது என பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவக் காரணத்திற்காக பொதுமக்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை வாட்ஸ்-அப்பில் கூட காண்பிக்கலாம்; அவ்வாறு காண்பித்தால் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்.

ரூ.50,000க்கு மேல் அனுமதிக்கவேண்டும் என்ற வணிகர்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். நகர்ப்புற பகுதிகளில் வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறது; தமிழகத்தில் எப்போதும் நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவும் மிகக் குறைவாகவே இருக்கிறது. வெறுப்பு பிரசாரங்களை கண்காணிக்க பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.