தமிழக செய்திகள்

‘குட்கா ஊழல் நடந்தபோது நான் கமிஷனராக இல்லை’ ஜார்ஜ் பரபரப்பு பேட்டி

குட்கா ஊழல் புகார் நடந்தபோது நான் கமிஷனராக இல்லை. இந்த பிரச்சினையில் உண்மை வெளிவர வேண்டும் என்று ஜார்ஜ் தெரிவித்தார்.

சென்னை,

குட்கா ஊழல் புகாரில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜூம் சிக்கினார். அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை நொளம்பூரில் உள்ள அவருடைய வீட்டில் கடந்த 5-ந் தேதி காலை 7 மணி முதல் 6-ந் தேதி காலை 8 மணி வரை 25 மணி நேரம் அதிரடி சோதனை மேற்கொண்டு 2 பைகளில் ஆவணங்களை அள்ளிச்சென்றனர்.

இந்த நிலையில் சி.பி.ஐ. சோதனை குறித்து எஸ்.ஜார்ஜ் நேற்று விளக்கம் அளித்தார். நொளம்பூரில் உள்ள தனது வீட்டில் நேற்று மதியம் 2.30 மணியளவில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். சுமார் 45 நிமிடங்கள் பேட்டி நீடித்தது. அப்போது அவர் கூறியதாவது:-

குட்கா ஊழல் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் இந்த விவகாரம் குறித்து நான் எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. அதேசமயத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழ்நிலையே இருக்கிறது. ஓய்வுபெற்ற அதிகாரிகளை பாதுகாக்க சுப்ரீம் கோர்ட்டு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 33 ஆண்டுகாலமாக பணியில் இருந்தேன். இதுவரை எந்த தவறும் நான் செய்தது இல்லை.

தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சி.பி.ஐ. விசாரணைகோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், குட்கா உற்பத்தியாளர் 21-4-2016, 20-5-2016 மற்றும் 20-6-2016 ஆகிய 3 நாட்கள் லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த நாட்களில் நான் போலீஸ் கமிஷனராக இல்லை. அந்த காலகட்டத்தில் கால்பந்து போட்டி பாதுகாப்பு விவகாரத்தில் நான் 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி மாற்றப்பட்டேன்.

பின்னர் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ந் தேதி மீண்டும் கமிஷனராக பொறுப்பேற்றேன். அந்த காலகட்டத்தில் இருந்தவர்களை நான் குற்றம்சாட்டவில்லை. லஞ்சப்பணம் பரிமாறியதாக ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. குறிப்பிட்டுள்ள நாட்களில் நான் கமிஷனராக இல்லை என்பதால், அவர் கூறியதில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது. இருந்தபோதிலும் எதிர்க்கட்சி வக்கீல் வில்சன் இதனை அறிந்து, என்னுடைய பெயரை மனுவில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

நான் கமிஷனராக பொறுப்பேற்ற பின்னர், குட்கா ஊழலில் கமிஷனர் பதவியில் உள்ள அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக வதந்திகள் பரவின. என்னுடைய கவனத்துக்கு வந்தபின்னர், அதுகுறித்து முக்கிய விவாதங்கள் நடந்தன. இருந்தபோதிலும் அந்த காலகட்டத்தில் விசாரணைக்கு ஆணையிடப்படவில்லை.

அப்போது எதிர்பாராதவிதமாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். என் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சமூக ஊடகங்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின. அதற்கு நானே குழு அமைத்து விசாரணை நடத்துவதா? என்று கருதினேன். அந்த காலகட்டத்தில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து நான் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு முன்பு தொடக்க விசாரணை மேற்கொண்டேன். துணை கமிஷனர் (நுண்ணறிவு பிரிவு) விமலாவுக்கு அழைப்புவிடுத்தேன். அவர் மாதவரம் துணை கமிஷனராக நீண்டகாலமாக இருந்தார். அவர் நல்ல அதிகாரி. அவரை தொடர்புகொண்டு, இந்த விவகாரம் உங்களுக்கு தெரியாமல்போனது ஏன்? என்று கேட்டேன். அவரும் தனக்கு தெரியாது என்று கூறினார்.

அவர் அனுப்பிய கடிதத்தில், நான் நுண்ணறிவு பிரிவில் 28.12.2015 அன்று தான் பணியில் இணைந்தேன். அதற்கு முன்னர் மாதவரத்தில் இருந்தேன். எனக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தீர்த்தக்கரையான்பட்டு என்ற இடத்தில் புழல் உதவி கமிஷனர் மன்னர்மன்னன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஜெயக்குமார் அங்கு சென்றார். அங்கு அவர் நடத்திய சோதனையில் புகையிலை பொருட்கள் இல்லை என்று அறிக்கை அளித்தார். சில பொருட்கள், சிறிய எந்திரங்கள் இருந்தது, குட்கா இல்லை என்றார். அதன்பிறகு உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவகுமார் அங்கு சென்று தடை செய்யப்பட்ட குட்கா இருக்கிறதா? என்று ஆய்வு செய்தார். அங்கு எதுவும் இல்லை என்பதால் நடவடிக்கையை கைவிட்டதாக தெரிவித்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விமலா அளித்த அறிக்கையின்படி, அவர் யார், யாருக்கு அந்த அறிக்கையை அளித்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த நேரத்தில் தாமரைக்கண்ணன், ஆபாஷ்குமார், கருணாசாகர், சேஷசாயி, ஸ்ரீதர் உள்ளிட்ட கூடுதல் கமிஷனர்கள் என பல்வேறு போலீஸ் உயர் அதிகாரிகளும் பணியில் இருந்தனர். நான் யாரையும் குற்றம்சாட்டவில்லை, உண்மை வெளிவர வேண்டும்.

அதன்பின்னர், நான் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவத்திடம், ஏன் ஜெயக்குமார் அங்கு சென்றது குறித்து நீங்கள் என்னிடம் அறிக்கை அளிக்கவில்லை என்று கேட்டேன். அதற்கு நல்லசிவம் இதுகுறித்து ஜெயக்குமார் என்னிடம் அறிக்கை அளிக்கவில்லை என்று தெரிவித்தார். இணை கமிஷனர் (நுண்ணறிவு பிரிவு) வரதராஜூ ஏன் நுண்ணறிவு அறிக்கை கொடுக்கவில்லை?. நான் இதுகுறித்து எனக்கு முன் பணியில் இருந்த போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் விமலா அறிக்கை அளித்தாரா? என்று கேட்டபோது அவர் அளிக்கவில்லை என்றார்.

துணை கமிஷனர் ஜெயக்குமார், கமிஷனர் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதை மட்டுமே தொழிலாக செய்துவந்தார். மிகமோசமான அதிகாரியாக இருந்தார். மூத்த அதிகாரிகள் உத்தரவை மதிக்கும் எந்த பணியையும் அவர் செய்யவில்லை. போலீஸ் துறையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டார். குட்கா ஊழல் போன்ற மிகப்பெரிய சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்தபோது அவர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதுகுறித்து அவரது பணி மதிப்பீடு அறிக்கையில் எதிர்மறையான அறிக்கையையே நான் அளித்தேன். அவரது நேர்மை சந்தேகத்துக்குரியது.

என் வீட்டில் சோதனை நடந்தபோது நான் வீட்டில் இல்லை என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் அப்போது வீட்டில் தான் இருந்தேன். வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்களை எடுத்துச்சென்றதாக பலர் தெரிவிக்கின்றனர். 1994-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட வீட்டுவசதி குடியிருப்பு சம்பந்தமான ஆவணங்கள், கார் காப்பீட்டு ஆவணங்கள் மட்டுமே என்னிடம் இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஏன் விசாரிக்கவில்லை?

பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு ஜார்ஜ் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி:- வருமான வரி சோதனையில் முன்னாள் கமிஷனர் பணம் வாங்கியதாக கூறப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் நீங்கள் தான் கமிஷனராக இருந்தீர்கள்...

பதில்:- இது முற்றிலும் பொய்யான தவறு. அந்த முன்னாள் கமிஷனர் என்பவர் எப்படி நானாக இருக்கமுடியும். துணை கமிஷனர் இந்த விவகாரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவர் தகவல் தெரிவிக்கவில்லை.

கேள்வி:- உங்களுக்கு தெரிந்திருந்தும் நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

பதில்:- இந்த விவகாரம் எனக்கு தெரிந்த பின்னர் தான் விசாரிக்குமாறு நான் அரசுக்கு கடிதம் எழுதினேன். போலீஸ் கமிஷனர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. என் மீது குற்றம் சுமத்தப்பட்டிருப்பதால் நான் எப்படி விசாரிக்கமுடியும்?

அரசியல் பின்னணி இருக்கிறதா?

கேள்வி:- குட்கா ஊழல் நடந்திருப்பதற்கான தனிப்பட்ட ஆதாரம் உங்களிடம் இருப்பதாக தெரிவித்தீர்கள். அதிகாரிகள் யாரும் உங்களிடம் தெரிவிக்கவில்லை. அப்போது யார் இந்த ஊழலில் ஈடுபட்டிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- அதனால் தான் இந்த விவகாரத்தை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றேன். அரசின் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விவாதித்தனர். யார் பற்றியும் நான் கருத்து கூறவோ, குற்றம்சுமத்தவோ விரும்பவில்லை. இந்த விவகாரத்தில் என்னிடம் இருந்த ஆதாரங்களை உங்களிடம் தெரிவித்தேன். நான் குட்கா ஊழல் நடக்கவே இல்லை என்று சொல்லவில்லை. ஏதோ நடந்திருக்கிறது. முன்னாள் டி.ஜி.பி. கொடுத்த அதிகாரபூர்வ தகவல்கள் எல்லாம் எங்கே போனது? அது தற்போது இல்லை. நீங்கள் டி.கே.ராஜேந்திரனிடம் கேளுங்கள்.

கேள்வி:- இந்த விவகாரத்தில் அரசியல் பின்னணி இருக்கிறதா?

பதில்:- நான் போலீஸ் துறையில் இருப்பதை மட்டும் சொல்கிறேன்.

திட்டமிட்ட சதியா?

கேள்வி:- துணை கமிஷனர் ஜெயக்குமார் தான் இதற்கு முழு காரணமா?

பதில்:- நான் அவரை குற்றம்சாட்டவில்லை. இந்த விவகாரத்தில் அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தால் இதுபோன்ற பெரிய அளவிலான ஊழல் நடந்திருக்காது.

கேள்வி:- நீங்கள் டி.ஜி.பி. ஆவதை தடுப்பதற்காக சில ஆட்கள் போட்ட திட்டமிட்ட சதி என்று நினைக்கிறீர்களா?

பதில்:- ஆமாம்.

கேள்வி:- உங்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் தவறு செய்தாலோ, உங்கள் கட்டளையை ஏற்க மறுத்தாலோ நீங்கள் வேறு இடத்திற்கு மாற்றாதது ஏன்?

பதில்:- நான் ஐ.பி.எஸ். அதிகாரி. எப்போது ஊழல் நடந்தாலும் நான் விசாரிக்கவேண்டும். அதனால் தான் நான் விசாரணை நடத்துமாறு அரசுக்கு கடிதம் எழுதினேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்