சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருவாரூர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டவரின் உடலை எலிகள் கடித்துக் குதறிய கொடூரமும், சீர்காழியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் மின்வெட்டால் கர்ப்பிணிப் பெண் மயக்கமடைந்த அநியாயமும் மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, அரசு மருத்துவமனைகள் குறித்த ஒருவித அச்சத்தையும் உண்டாக்குகிறது.
உங்கள் கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களும் அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்கும் ஆய்விற்கு செல்வதில்லை. ஆய்விற்கு சென்ற இடத்தில் மருத்துவரைப் போலவே வெள்ளைக்கோட் அணிந்துகொண்டு அங்கிருப்பவர்களைக் கேள்வி கேட்பது போல ரீல்ஸ் எடுத்து அதை background music உடன் வெளியிடவும் தவறுவதில்லை. ஆனால், அரசு மருத்துவமனைகளின் தரத்திலும் அடிப்படை வசதிகளிலும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வீடியோ எடுப்பது, வசனம் பேசுவது, வீராப்பு கட்டுவது இவற்றைத் தவிர, நிர்வாகம் என்ற அதிமுக்கிய அடிப்படை பொறுப்பும் இருக்கிறது என்பதை நீங்களும் உங்கள் அமைச்சர்களும் எப்போது உணர்வீர்கள்?
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.