தமிழக செய்திகள்

கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர் அ.தி.மு.க. கொடியை காரில் பயன்படுத்துவதா? சசிகலாவுக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம்

அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலா கட்சி கொடியை பயன்படுத்தியதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பெங்களூரு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சசிகலா குணமடைந்து வீடு திரும்பினார். அவருடைய காரின் முன்பக்கத்தில் அ.தி.மு.க. கொடி பறந்தது. இதற்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

சசிகலாவோ, அவரை சார்ந்தவர்களோ இல்லாமல் கட்சியும், ஆட்சியும் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணமும், அ.தி.மு.க.வின் எண்ணமும் ஆகும். அந்த வகையில் கட்சியும், ஆட்சியும் தற்போது சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. யார் வந்தால் என்ன? யார் போனால் என்ன? அதுபற்றி எங்களுக்கு (அ.தி.மு.க.வுக்கு) எந்த கவலையும் இல்லை. எந்த அச்சமும் இல்லை.

மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க. 100 நாள் கூட தாண்டாது என்று கருணாநிதி தெரிவித்திருந்தார். ஆனால் 100 ஆண்டுகள் அல்ல, ஆயிரம் ஆண்டுகள் அ.தி.மு.க. தழைத்தோங்கும் என்று எம்.ஜி.ஆர். தெரிவித்தார். இதேபோலத்தான் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் கூறியிருக்கிறார்.

எத்தனையோ சோதனைகளை கடந்து அ.தி.மு.க. தற்போது வெற்றி நடை போடுகிறது. அந்த கட்சியை, நாங்கள் தான் கட்சி, நாங்கள் தான் கட்சியை மீட்டெடுப்போம்' என்று சொன்னால், அந்த எண்ணம் ஒருபோதும் நிறைவேறப்போவது இல்லை. அது பகல் கனவாகத்தான் முடியும்.

சசிகலா சென்ற காரில் அ.தி.மு.க. கொடி இருந்தது, நாங்கள் (அ.தி.மு.க.வினர்) ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று. கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர் எப்படி கட்சி கொடியை உபயோகிக்கமுடியும்? அதனால் நிச்சயமாக இதனை ஏற்றுக்கொள்ளமுடியாததாகத்தான் அ.தி.மு.க. கருதுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

சசிகலா காரில் அ.தி.மு.க. கொடியை பயன்படுத்தியது சட்டப்படி தவறு. அ.தி.மு.க. கொடியுடன் தமிழகத்திற்குள் நுழைந்தால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அ.தி.மு.க.வின் விதிகளின்படி கட்சிக்கு விரோதமாக யார் நடந்தாலும், அவர்கள் தானாகவே அடிப்படை உறுப்பினர் பதவியை இழப்பார்கள். அதன் அடிப்படையில் சசிகலா தனது கட்சி உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்.

இவ்வாறு அமைச்சர்சி.வி.சண்முகம் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்