சென்னை,
சென்னை கிண்டியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜய்யை விமர்சிப்பது ஏன்? என்பது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;
திரைத்துறையில் உச்சத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன் என்று கூறுகிறீர்கள். உச்சத்தை விட்டுவிட்டு வந்துள்ளேன் என்று கூறினால், உங்களை யார் வரச்சொன்னது என்ற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்தால் சேவை செய்ய வேண்டுமே தவிர, தற்பெருமை பேசக்கூடாது. விஜய் மற்றவர்களுக்கு வேண்டுமானால் தலைவர். விஜய் எனக்கு தம்பி. இப்படி சொல்லாதே.. என்று கூறவேண்டிய கடமையும், பொறுப்பும் எனக்கு உள்ளது. இந்த கோட்பாட்டுக்காகத்தான் எம்.ஜி.ஆர், அண்ணாவை வைத்துள்ளோம் என்று கூற அவரால் முடியுமா?
நான் தெளிவாக கூறுகிறேன். நான் ஆள் மாற்றம், ஆட்சி மாற்றத்துக்கு வரவில்லை. அரசியலமைப்பு அடிப்படை மாற்றத்திற்கு வந்துள்ளேன். இங்கு தேர்தல் அரசியல், கட்சி அரசியல் உள்ளது. மக்கள் அரசியல் இல்லை என்று நான் கூறுகிறேன். இங்கு செய்தி அரசியல், விளம்பர அரசியல் உள்ளது. சேவை, செயல் அரசியலை நோக்கி நான் செல்கிறேன். அப்படி தனது நிலைப்பாட்டை எடுத்துச்சொல்ல வேண்டும். சரியில்லை என்று சொல்வதற்கு ஒரு ஆள் தேவையில்லை. எது சரி என்று சொல்லவே ஒரு ஆள் தேவைப்படுகிறது. தவெக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.